Tuesday, February 17, 2009

முப்பதைக் கடந்த காதல்!

சேகர் மாலதி இரண்டு பேரும் ஒரே அலுவலகம். வயது இருவருக்கும் முப்பதுக்கு மேல். சேகர் செட்டியார் ஜாதி. என்ன செட்டியார் என்று கேட்காதீர்கள். நம் தமிழ் நாட்டிலே கல்யாணம் என்றால் ஒரு ஜாதி. கலப்பு திருமணம் என்றால் ஒரு ஜாதி. அரசாங்கத்தில் ஜாதி சான்று வாங்க வேண்டும் என்றால் அப்போது வேறு ஜாதி. மாலதி முதலியார். அப்புறம் என்ன பிராப்ளம்? திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே ! பெண் அவளது குடும்பத்தில் மூத்தவள். தாயார் கொஞ்சம் வாய் அதிகம். அவரது சொந்த ஊரிலே பக்கத்து வீட்டில் ஒரு காண்டிராக்டர். அவரது பெண் வன்னிய ஜாதி பையனுடன் கொஞ்ச காலம் பழகிவிட்டு, பெரிய பிரச்சினை ஆகி ஒரு வழியாக சொந்த ஜாதியிலேயே திருமணம் ஆனது. இடையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது அல்லவா? அதற்க்கு மாலதியின் அம்மா தான் காரணம். மாலதிக்கு நான்கு தங்கைகள். இவர்கள் அயிந்து பேருக்கும் 12 வயதிலேயே தலை நரைத்து விடும். ஏதோ பரம்பரை வியாதியாம். இதுகளுக்கு எப்படி கலியாணம் பண்ணப் போறா நான் பார்க்கிறேன் என்று காண்டிராக்டர் சபதம் போட்டு சதி வேலை பல செய்து வந்தார். இந்த வேதனை தாங்காமல் மாலதி அப்பா வேற மண்டையப் போட்டு விட்டார். மாலதிக்கு ஜாதி விட்டு கலியாணம் நடந்தால் மற்ற பெண்கள் கதி என்ன? காண்டிராக்டர் முதலியார் சும்மா இருப்பாரா? உடனடியாக மாலதிக்கு அடுத்த இரண்டு பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்து தயார் செய்து விட்டு, மாலதிக்கு பதிவுத் திருமணம் செய்வது என்று தீர்மானம் செய்து ஆறு மாத காலத்தில் அனைத்தும் முடிந்தது. அடியேன் தான் solemnization. இதற்கெல்லாம் இந்த அமைப்பின் நண்பர்கள் மிகவும் பாடுபட்டனர். சேகர் - மாலதி திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக போய்க்கொண்டு இருக்கிறது.

Monday, February 16, 2009

சிவா-உமா !

இவர்களில் சிவா எங்கள் அமைப்பில் நிர்வாகி. எங்களுடனேயே எப்பவும் இருப்பவர். எப்பொழுது சென்னை சென்றார் உமாவோடு பேசினார் காதலித்தார் என்றே தெரியவில்லை! இவருக்கு தீவிரமாக அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவரை வேறு ஒரு பெண் காதலித்து கொண்டிருந்தது. ஆனால் இவர் அந்தப் பெண்ணிடம் தான் வேறு பெண்ணை விரும்புவதாக தெரிவித்துவிட்டார். இவர் உமாவை காதலிப்பதை எங்களிடம் சொன்னபோது நம்பவே முடியவில்லை! சரி, சிவா நீ அந்த பெண்ணை கூட்டி கொண்டு இங்கே வந்துவிடு. நாங்கள் திருமணம் செய்து வைத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டோம். அந்த பெண்ணின் தந்தை செல்வாக்கு மிக்கவர். அடியாள்கள் அவரிடம் உண்டு. அதனால் நேரே அந்த பெண் படிக்கும் கல்லுரிக்குச் சென்று அழைத்துவரச் சொன்னோம். இவர் அழைத்து அந்த பெண் வந்து விட்டால் எப்படியும் கல்யாணம் செய்து வைத்து விடுவது. சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார் என்று சொன்னால் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவரை வற்புறுத்த வேண்டியது தான் என்று எங்களுக்குள் தனியாக பேசிக் கொண்டோம். என்ன ஆச்சரியம் அன்று மாலையே உமாவை புத்தகம் டிபன் பாக்சுடன் அழைத்து வந்து விட்டார். என்ன நடந்தது என்று கேட்டோம். சார் எங்கள் அப்பா திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார். இவர் கல்லூரியில் வந்து அழைத்த தும் என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து எங்களை வாழ்த்தி அனுப்பி விட்டார்கள். அனால் உங்களை எல்லாம் பார்த்தால் சாதாரண ஆளுங்க மாதிரி தெரியுதே எங்க அப்பா அடியாட்களோட வந்து சிவாவை ரெண்டு போட்டு என்னை அழைத்துக்கொண்டு போயிடுவார் நீங்கள் என்ன செய்யபோறீங்க என்று கேட்டார். நாங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் வந்ததை உடனே உங்க அப்பாவுக்கு நாங்க தெரியப்படுத்தப் போகிறோம் . அது தான் முறை. நீங்கள் சாப்பிட்டு பயப்படாமல் ரெஸ்ட் எடுங்கள் என்று சொன்னோம். அதே போல உமாவின் அப்பாவுக்கு தந்தி மூலம் தகவல் தெரிவித்தோம். ஒரு நண்பர் வீட்டில் இவர்களை தங்க வைத்தோம். சப் ரிஜிஸ்டிரர் ஆபீசுக்கு நண்பர்கள் பத்து பேரை வரச்சொன்னோம். ராத்திரி எல்லாம் யாரும் தூங்காமல் காவல் இருந்தோம். பொழுது விடிந்தது. Sub-registrar வீட்டுக்கு ஆள் அனுப்பி தயாராக இருக்கவும் பாதுகாப்பு குறித்தும் பேசினோம். அவர் ஒத்துழைக்க சம்மதித்தார். நான் தான் நடத்திவைத்த தாக கையெழுத்து போட்டேன். நேராக அவர்களை வேலூர் நண்பர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வந்தோம். இதற்குள் உமாவின் அப்பா சிவாவின் அப்பா வீட்டிற்கு அடியாட்களுடன் போயிருக்கிறார். அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். சொந்த மச்சான் தானே. இவர்கள் அவரை திட்டவும் அவர் இவர்களை திட்டவும் தெருவிலே ஒரே கலாட்டாவாக இருந்தது. உள்ளூர் ரவுடி கும்பலும் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் வந்த அடியாட்களே வெறுத்துபோய் உமாவின் அப்பாவே ஏற்ப்பாடு செய்து அனுப்பிவிட்டு நம்மையும் அழைத்து வந்து நாடகம் ஆடுவதாக சந்தேகப்பட்டு செலவு தொகை வாங்கி கொண்டு கிளம்பி விட்டனர். இந்த காலத்து பசங்க அப்படிதான் என்று சொல்லி எங்களை தேடினார்கள். கல்யாணம் எல்லாம் முடிந்து போய்விட்டது. நீங்கள் ஆசி கூறுவதாக இருந்தால் அவர்களை வரவழைக்கிறோம் என்று சொன்னோம். பிறகு பேசி சம்பிரதாயப்படி ஒரு தடவை கல்யாணம் பண்ணுவோம் என்று எங்களிடம் அனுமதி கேட்டு கெஞ்சினார்கள். நாங்கள் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு பிறகு சம்மதித்தோம். அப்படி இனிமையாகவே முடிந்து விட்டது.

Sunday, February 15, 2009

காதலர் தினம்!

இருபது வருஷத்துக்கு முன்னால் இந்த தினம் அவ்வளவு பிரபலமாகக் கொண்டாடப் பட்டதில்லை. வர்த்தக நிறுவனங்கள் தான் இதை பிரமாதமாக பிரபலப் படுத்திவிட்டன. இருந்தாலும் இது கிராமத்துப் பக்கம் இன்னும் போகவில்லை.
இதன் அடிப்படை தத்துவம் குடும்பம் என்ற அலகை முன்னிறுத்தும் சமுதாயத்துக்கு எதிரானது.
காதல் என்பது நான் பார்த்த அளவில் மார்வாடிக் கடையில் வாங்கும் தங்க நகையைப் போன்றது. அந்த மார்வாடியும் வாங்கின நபரும் தவிர மற்றவர்கள் அதை தங்கம் என்று லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரசீதை தொலைத்துவிட்டால் விற்ற மார்வாடி கூட ஒப்புக் கொள்ளமாட்டான். பல தடவை உரசி உரசி பார்ப்பார்கள். அது போல காதலர்கள் மட்டுமே அதைக் காதல் என்று சொல்வார்கள். மற்றவர்கள் "அதுக்கு அலையுதுங்க, பாரு" என்று தான் சொல்வார்கள். நாங்கள் ஒரு மாநில அமைப்பின் உள்ளூர் கிளை பொறுப்பாளர்களாக இருந்தோம். அப்போது நாங்கள் சில உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு தீர்வு செய்தோம். அவற்றில் சில காதல் திருமணங்களும் உண்டு. அதைப் பற்றி அடுத்த அஞ்சலில் பார்ப்போம்.